தமிழ்
வளர்ச்சியில் சைவ சமயத்தின் பங்கு
(முனைவர். ரெ. சந்திரமோகன், இயற்பியல் துறை, ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை 630 303)
முன்னுரை
ஒரு மொழி வளர்ந்துள்ளது என்றால், அதற்கு முக்கியமான காரணிகளை ஆய்ந்து
சீர்தூக்கிப் பார்த்தோமானால், அவற்றில் முக்கியமானதாக சமயம் திகழும். இது அனைத்து மொழிகளுக்கும் பொதுவாகும். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்
மொழியாம் செம்மொழி. நயத்தக்க நாகரீகம் பற்றி பேசிய
மொழி. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற ஒருமைப்பாடு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
என்ற ஒப்பற்ற செயதி, யாம்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
எனும் மாண்பு, போன்ற எண்ணற்ற செல்வங்களைக் கொண்டது.
இத்தமிழ் மொழி பேசும் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை
மேற்கொண்டிருந்தனர் என்று உலகம் அனைத்தும் வியந்து போற்றி வருகின்றது. தமிழ் மொழி
வளர்ச்சியில் "சங்கத்தமிழ்"
வளர்த்த மன்னர்கள், சங்கம் மருவிய காலம் வரையிலான பல புலவர் பெருமக்கள் இருந்துள்ளனர். சங்கத்தமிழ்க்
காலத்திற்கு முன்பும் கூட கிராமிய நாட்டுப்புற இலக்கியங்கள் செவிவழியாகத்
தொடர்ந்து தமிழ் சமுதாயத்தில் வளர்ந்து செறிந்து உள்ளது.
இந்திய மண்ணின் செல்வச் சிறப்பினை உணர்ந்து
உலகமெங்கும் இருந்து கலை, செல்வம், இலக்கியம், சமயம் என அனைத்துக்கும் தாயாக விளங்கிய பாரதத்தில் இருந்து தங்கள்நாடு பலன் பெற வாணிகம், படையெடுப்பு செய்துள்ளனர். மங்கோலியர்
வருகை, பெளத்தம், இசுலாம், கிருத்துவம், போன்ற சமயங்களின் அணிவகுப்பு என்று இந்தியா முழுதும்
பல்வேறு மாற்றங்களில் பல அற்புதப் படைப்புகள் மறைந்து போயின. இதனிடை ‘ஆடிப்பெருக்கு’
போன்ற சடங்குகளில் பல சுவடிகள் அழிந்தன.
ஆயினும் அவ்வப்போது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் அவை உதவின.
சீறாப்புராணம், போப்பையரின் திருக்குறள், திருவாசக மொழி பெயர்ப்புகள் தமிழ்
மொழியின் வளமையை உலகிற்கு பறை
சாற்றின. இக்கட்டுரையில் தமிழ் வளர்ச்சியில் சைவம் ஆற்றிய
பங்கினையும், பாங்கினையும் காணலாம்.
சைவ
சமயம்
சைவ சமயம் என்பது முப்பொருள்களான "பதி, பசு, பாசம்" என்பதை ஏற்றுக் கொண்ட
மக்க்ளைக் கொண்டது. "சிவன்" என்ற பெயரையுடைய இறைவன் எண்குணங்கள் பெற்றவன்
என்றும், அதில் உயிர்களின் தொகுதியை ‘பசு’ என்றும், அவற்றின் தலைவன் 'பதி' - சிவன் என்றும், பசு அனாதியே ‘பாசம்’ என்ற கயிற்றினால்
கட்டுப் பட்டுள்ளது. அந்தக் கயிறு முப்பொருள்களால்
ஆனது. இவற்றிற்கு பாசம் முப்பொருள்களான ஆணவம், கன்மம், மாயைத் தொகுதியை குறிப்பதாகவும்
ஏற்றுக் கொண்ட மதம்[1].
மொழிவளர்ச்சி
ஒரு மொழி வளர்ச்சி என்பதில் புதிய சொல்லாக்கம், ஒரு பொருட் பன்மொழி பல்வகைகளில்
உருமாரும் சொற்கள், புதிய அணிகள், புதிய உருவகங்கள், மாதிரி வடிவங்கள், பரவசத்தைத் தூண்டும்
செய்திகளை இலகுவாக பரிமாற்றம் செய்ய உதவுதல் போன்றவைகள் அடங்கும்.
அவ்வகையில் ‘பதி, பசு, பாசம்’ என்பதே ஒரு மொழி வளர்ச்சிச் சிந்தனையாகும். தமிழ் மறை ஞானசம்பந்தனின் தேவாரங்கள், திருமூலரின் திருமந்திரம் போன்றவை
தேர்திரமாகவும், மந்திரமாகவும் திருக்கோயில்களில் பயன்படுத்தும் வகையில் இயற்றப்பட்டவைகளாகும்.
தமிழ் நாட்டில் வடமொழியில் அர்ச்சனை நடைபெறுவது தவிர்க்க
முடியாதது என்று புலம்பும் கூட்டத்திற்குச் சவாலாக பன்னிறு திருமறைகள் விளங்குகின்றன. வள்ளுவரின், "கனியிருக்கக் காய் கவர்ந்தற்று" என்ற குறட்பாவிற்கு
"நானறிந்த தமிழ் மொழியிருக்க, என் நண்பன், என்தலைவன், என்இறைவனிடம் பேசுவதற்கு ‘சங்கேத பாசை’ எதற்கு, தவறாக உச்சரித்தால் தவறான வரம் கிடைக்கலாம்
தானே" என்பது போல் வள்ளுவப் பெருமகனார் நகுதல் போன்று பொருள் கொள்ளலாம்.
"யாமறிந்த மொழிகளிலே,
தமிழ் மொழி போல்
இனிதாயுளது எங்கும்
காணோம்" என்று பன்மொழி பண்டிதன் பாரதி பகர்ந்தது எதனாலே என்று ஆய்ந்தபோது, பாரதியின் கவிதைகளில் மிளிர்கின்ற
சந்தம், பொருள், அணிகளில் கலந்திருந்த சைவ, வைணவ இலக்கிய வாசிப்புகளின் பாதிப்பு என்பதை
பல ஆன்றோர்கள் ஆய்ந்து பதிவு செய்துள்ளனர்.
இனி சாஸ்திரம், தோத்திரம் தவிர இறைவனிடம் எப்படி இரண்டறக் கலத்தல் முடியும்
என்பதை திருவாசகம் கூறும் முறையில் எந்த நூலும் செய்தது இல்லை எனலாம். தமிழ் நூல்களின் வரிசையில் அகத்திணை, புறத்திணை என்ற பாகுபாட்டில் அடங்காத
ஒரு நூல். தன்னையே, பெண்ணாகவும், ஆணாகவும் இறைவனின் தோழனாகவும், பிற நேரங்களில் சுய ஆய்வு செய்து, தன் ஆற்றாமைகளைப் புலம்பும் சக மனிதனாவும், தம்மிற் சிறந்த ஆடியார்கள், சிவநெறிச் செல்வர்கள் கூட்டத்தில்
சேர, நாடகமாடி, வெற்றி பெற்ற ஒரு உயிரின் புலம்பல் திருவாசகம் எனும் காவியமாகிறது. இதற்கிடையே பல உட்கதைகளில் திரிபுரம் எறித்தல், தாயுமானவராய் பன்றிக்கும் கருணை
காட்டிய பெற்றியும், நரியைப் பரியாக்கி தமக்காக பிரம்படிபட்ட கொள்கையும், மணிவாசகர் கையாள்கின்ற யுக்தி, பல்வகையில் இலக்கிய வகை களிலேயே புதுமையாகும்[2].
திருவாசகச் சிறப்பு
"சிவபுராணம்" என்று துவக்கத்திலேயே
ஒரு புதிய சிந்தனை. "புராணம்" என்றால் தொன்று தொட்டு, பழமையான ஒரு கதை என்று பொருள்.
அதில் கதை மாந்தரின் தோற்றம், வளர்ச்சி, ஊர், அதன் சிறப்பு என்று எண்ணற்றவைகள் பேசப் பெறும். ஆயின் தோற்றமும், முடிவுமிலா இறைவனுக்க புராணம் எழுதுவது
எப்படி என்ற யுக்தி, புதுமையிலும் புதுமையாகும். இறைவன் தன்னுள் எழுந்தருளிய தருணத்தையே, அவனது தோற்றமாகவும் அவன் நீடித்து தன்னுள் இருக்கும் காலத்தில, தோன்றும் உணர்வுகளினால் இறைவன்
எப்படியுள்ளான் என்பதை பிதற்றும் முகமாக அருளும் 658 பாடல்களை, 6 வாழ்க, 5 வெல்க, 8 போற்றி என்று திருவாசகம் முழுமையின்
சாராம்சத்தை சிவபுராணத்தில் தந்துள்ளார்.
மனிதன் விழித்த நிலையில் எண்ணிக்கை தெரியும், ஆதனால் தான் முதன்முதலில் நமச்சிவாய
வாழ்க! நாதன்தாள் வாழ்க! என்று ஆரம்பித்து,
..... ஆராத இன்பம் அருளுமலை போற்றி! ..... என்பது வரை மனத்தை ஒருங்கினைத்து
இறைவாழ்த்து பாடுகின்றார்.
"சிவனவன் சிந்தையில் நின்ற அதனால்"
என்ற நிலையில் சிந்தையில் இறைவன் எழுந்தருளியவுடன், முந்தைவினை முழுதும் ஓய சிவபுராணம்
உரைப்பன் .... என்று பின்னர், பிதற்றல் துவங்குகிறது.
இறை-உயிர்க் கலவியில்,
பிதற்றலை நூல் முழுக்கக் கொண்டு
செல்கின்றார். திருவம்மானை, திருஊஞ்சல் திருத்தெளளேணம், திருவுந்தி யென்ற மகளிர் விளையாட்டுகளில்
பயன்படுத்தும் சொற்கள், பொருள், உவமம் என்று பல்வகையில் தமிழ் மொழிக்கு அணி செய்யும் அற்புதத்
திருப் பாட்டுக்கள் திருவாசகமாய் மலர்ந்திருக்கின்றன.
ஒரு எடுத்துக்
காட்டினைக் காண்போம்.
கோயில் திருப்பதிகம்
ஏழாம் பாடலில்,
"இன்றெனக்கருளி இருள் கடிந்து உள்ளத்
தெழுகின்ற ஞாயிறே
போன்று
நின்ற நின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிது
மற்றின்மை
சென்று சென்று
அணுவாய்த் தேய்ந்து தேய்ந் தேய்ந்தொன்றாம்
திருப்பெருந்துறை
சிவனே
ஒன்று நீ அல்லை யன்றி ஒன்றில்லை
யாருன்னை
அறியகிற்பாரே"
இத் திருப்பாடலில் இறைவன் எங்குமாய் எல்லாமாய் என்றுமாய் இருக்கும்
தன்மையை விளக்கும் மணிவாகசர், இரண்டு உவமைகளைக் கையாள்கின்றார். இவைகள் படிப்பவர் உள்ளத்தின் மேன்மையைப் பொருத்து
சிறந்த பொருள்களைத் தரும். சூரியன் முன் விளக்கொளி காரியப்படாது. அடங்கி நிற்றல் போலவும், தலைவியும் தலைவனும் கூடல் நுகர்ச்சியின்
போது உணர்வற்று இருப்பதுபோலவும் என்று உவமிக்கின்றார்[3]. இதனையே உணராமல் உணர்வது, உணர்வதால் உணராதது என்றும் கொள்ளலாம். இதுபோன்று நுட்பமான
செய்திகளை திருவாசகம் எங்கும் காணலாம்.
பிற சான்றுகள்
தமிழ்ச்சங்கத்தின் தலைவனாகக் கொண்டும், தமிழ்க்குமரனாக முருகப் பெருமானையும்
கொண்டு இறைவனுக்கும் மொழிக்குமான தொடர்பை வைசவம் தந்தது போல் பிற மதங்கள்
தந்ததில்லை.
"ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள்
வாழ்க!" "மகேந்திரமதனிற் சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்", "மூவா நான்மறை
முதல்வா போற்றி" என்று அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்மறைகள் இறைவனிடம்
இருந்து தோன்றியவை என்றும் அவைகளின் விளக்கமாய் சிவஆகமங்கள் தோன்றியுள்ளன என்றும்
மணிவாசகர் கூறுகிறார். அதனால்தான்
இன்றும் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுள்ளன. பன்னிரு திருமுறைகள் மட்டுமின்றி சந்தானக் குரவர்கள்
இயற்றிய பல ஞானப் பொக்கிசங்கள் தமிழ் மொழிக்கு மேலும் வளம் சேர்த்துள்ளன.
இக்கால கவிஞர்களும்[4], திருவாசத்தின் பாதிப்பு இல்லாமல்
எழுத முடியாத நிலையில் தமிழ்மொழிக்குப் பெருவளமையைச் சேர்த்திருக்கின்றார் மணிவாசகர்.
ஞானசம்பந்தர்
பாடல்களில், மூர்த்தி, தலம், கீர்த்தி, 8வது பாடலில் இராணவனன், 9-10 புறச்சமயத் தாழ்வு நிலை, 11ஆம் பாடலில் திருக்கடைக்காப்பு
என்ற கட்டமைப்பு உள்ளது. ஆனால் திருநாவுக்கரசரோ, மூர்த்தி, தலம், கீர்த்தி, 8வது பாடலில் இராவணன், ஆனால் 9இல் புறச்சமயச் சாடல் இல்லாத நிலையில், 10ஆம் பாடலையும், இராவணனுக்கு இறைவன் அருளிய திறத்தைப்
பாடுகின்றார். சமண சமயத்திலிருந்து வந்ததாலும், தன் வயதிற்கு யாரையும் பழித்துப்
பேசல் கூடாது என்பதாலும், திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்த நாவுக்கரசர். பிறர் மாதர் மேல் பற்று வைத்த இராவண மன்னனுக்கும்
இறைவன் அருளியதை மிகப் பெரும் பேற்றாகவும்
கொண்டு தம் திருமுறைகளை அமைத்த பாங்கு தமிழுக்குப் பெரிதும் வளம் சேர்த்துள்ளன.
திருமூலர், வடமொழியிலிருந்து மந்திரங்கள், சாத்திரங்கள் முதலியவற்றைத் தமிழில்
அற்புதமாய் செய்துள்ளார்.
"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது
மாமத யானை
பரத்தை மறைத்தத
பள்முதப் பூதம்
பரத்தில் மறைந்தது
பார்முதப் பூதம்"
என்ற வகையில்
பகுதி, விகுதி மாற்றத்தில் அற்புதமான செய்திகளை ஒழித்து இயற்றிய பாடல்கள்
பல மொழிக்கு வளம் சேர்க்கின்றன.
தமிழரின் அக்கால வாழ்வியலை அப்படியே சித்தரித்துக் காட்டும்
பெரிய புராணம், தமிழ் மொழிக்கு ஒரு மகுடமாகும். சாதி,
சமய பிணக்குகளைக் கடந்து, பக்தி வைராக்யம் ஒன்றையை பிரதானமாகக்
கொண்டு வாழ்ந்த அடியார் பற்றிய ஆற்புத வரலாற்று நூல். இறைவனே அடியெடுத்துக் கொடுத்தது உண்மை என்பது
இதனைப் படிப்போருக்கு நிச்சயம் உணர்த்தும் நூல் இது. மனிதனாய்,
நண்பனாய், தலைவனாய், குழந்தையாய், ஆணாய், கற்பனை செய்து, இலக்கியம் செய்யலாம். ஆனால் தன்னைப் பேயாய்ப் பாவித்து, அப்பொழுதும் கூட இறைவனையே நினைத்து
வாழும் ஒரு ஆத்மா பயன்படுத்தும் சொற்களால் புதுமையாக எழுதப்பட்டது காரைக்கால் அம்மையாரின்
திருமுறைகள். அக்களம்பகத்தில், எண்ணற்ற செய்திகள் சந்தங்கள், ஆவியுலகக் காட்சிகள், என்ற அற்புதமான உலகினும் தமிழ்
மொழி பயன் பெறும் என்று இத் திருமுறை கூறுகின்றது.
முடிவுரை
மேற்குறிப்பிட்ட இவற்றுடன் உலக சைவசித்தாந்த மாநாடு, திருமந்திர மாநாடு, திருக்குறள் பேரவை, சைவத் தொண்டு முதலிய எண்ணற்ற
தொண்டுகளை திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனங்கள் பல அறிய தமிழ்ப்பணி செய்வதை நாம் நினைவு
கூறலாம். ஒரு மொழியின் வளர்ச்சியில் சமயம்
பெரும் பங்கு வகிப்பது உண்மையே[5]. உருது
மொழிக்குக் குரான், கிரேக்க பாரசீக ஆங்கில மொழிக்கு பைபிள், எகிப்தின் குனேபார்ம், சீன செளராஸ்ட்ர இத்தாலி ஹீப்ரு
மொழிகளில் வளர்ச்சியிலும் சமயம் பெரிதும் உதவியுள்ளது உண்மையே. அதுபோன்றே தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பல சமயங்கள் பல சமயங்களில் உதவியதும் உண்மையே. ஆயினும் சைவ சமயம் தமிழ் மொழி வளர்ச்சியில் ஆற்றிய
பங்கிற்கு நிகராக பிறிதொன்று செய்ததில்லை என்பது உள்ளங்கை
நெல்லிக்கனியாகும்.
-------------
No comments:
Post a Comment